Friday, December 11, 2009

இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் வந்த வழி!


கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் சவாலான தன்மைக்கு ஏற்ற ஊதியம்தான் அந்த அணி தற்போது பெற்றுள்ள டெஸ்ட் தரவரிசை முதலிடம். ஆனால் இதன் ஆரம்பம் சௌரவ் கங்கூலி தலைமையில் 2000-01ஆம் ஆண்டே துவங்கிவிட்டது.

சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவில் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பிறகு நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் தொடரில் 8 போட்டிகளில் ஒரு போட்டியை மட்டுமே வென்று மிகவும் சோகமாக நாடு திரும்பியவுடன் சச்சின் தன் தலைமைப் பொறுப்பை உதறினார்.

ஆனால் உடனடியாக ஹான்சி குரோனியே தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டதால் அவரை இந்த தொடர் வரை நீடிக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் என்ன பயன்? அந்த இரண்டு டெஸ்ட்களிலும் இந்தியா தோல்வியைத் தழுவி, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை‌‌ச் சந்தித்தது.

அதன் பிறகே சௌரவ் கங்கூலி கேப்டனாக நியமிக்கப்படுகிறார். முதலில் மேற்கிந்தியத் தொடரில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை வென்று அதன் பிறகு 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வித் தழுவியது. ஆனால் அந்த ஒரு டெஸ்ட் போட்டி வெற்றிதான் துவக்கம்.

அதன் பிறகு ஸ்டீவ் வாஹின் வெற்றி பெற முடியாத சவால் நிறைந்த டெஸ்ட் அணி 16 டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வென்று, இந்தியாதான் கடைசிப் பகுதி, இங்கும் வெற்றி பெற்றால் நாம்தான் உலகின் அசைக்க முடியாத கிரிக்கெட் அணி என்ற நினைப்பில் ந்கிறங்கியது.

கும்ளேயுடன், ஹர்பஜன் இணைகிறார். சச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண் என்ற நால்வர் கூட்டணி பரிமளிக்கத் தொடங்கியது.

மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றாலும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி வென்று அந்தத் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றதுதான் இந்திய அணியினரிடையே தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தது. ஜான் ரைட் தன் பங்கிற்கு டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கும், குறிப்பாக அயல் நாட்டு போட்டிகளுக்கு எப்படி தயார் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

2002-இல் சேவாக் எனும் அற்புதன்...

கங்கூலி தன் வாழ்நாளின் மிக முக்கியமான, இந்திய கிரிக்கெட்டிற்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு முடிவை எடுக்கிறார். அதுதான் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சேவாகை துவக்க வீரராக களமிறக்கிய தைரியமான முடிவு.

துவக்கத்தில் முதன் முதலாக களமிறங்கும் சேவாக், பந்துகள் ஸ்விங் ஆகும் சவாலான மைதானத்தில் 96 பந்துகளில் 84 ரன்களை விளாசினார். அந்த டெஸ்ட் போட்டியில் தோற்றோம். ஆனால் அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக சேவாக் சதம் கண்டார். அன்றிலிருந்து இன்று வரை சேவாக் என்றால் உலக அணிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்தான்.

அதுமட்டுமல்லாது, ராகுல் திராவிடின் சதங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு சேவாக் துவக்க வீரராக களமிறங்கியதும் ஒரு காரணம். இங்கிலாந்தின் மேற்கூறியத் தொடரிலேயே திராவிட் 4 சதங்களை எடுத்தார். அதன் பிறகுதான் திராவிடும் ஒரு பெரிய ஒன்றாம் நிலை அச்சுறுத்தல் வீரராக உருமாறுகிறார்.

அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸில் இந்தியா 26 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் வென்றது. இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்று தொடரை சமன் செய்தது. இலங்கைக்கு எதிராக 8 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியைப் பெற்றது.

மேற்கூறியத் தொடர்களை இந்தியா இழந்தாலும் அயல் நாட்டில் ஒரு வெற்றியையாவது பெற முடியவேண்டும் என்ற புதிய சவாலை கங்கூலி ஏற்படுத்தினார்.

இடையே 2003 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் மோசமாக தோற்று, அதன் பிறகு மீண்டெழுந்து அனைத்து அணிகளையும் வென்று இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவிடம் தோற்றது.

அதன் பிறகு 2003-04 ஸ்டீவ் வாஹ் ஓய்வு அறிவித்த அந்த முக்கியத் தொடர் வந்தது. அடிலெய்டில் திராவிடின் அசாத்தியமான இரட்டை சதம் மற்றும் 78 ரன்களாலும், அஜித் அகார்கரின் பந்து வீச்சினாலும் அதிர்ச்சி வெற்றி பெற்ற இந்தியா மெல்போர்னில் சேவாக் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்த 195 ரன்கள் துர்கனவை பயன்படுத்திக் கொள்ளாது தோல்வியைத் தழுவியது.

ஆனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா கடைசியில் போராடி டிரா செய்ய, இந்தியா அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்திய அணி கங்கூலியின் கீழ் ஆதிக்கம் செலுத்தியது. அதற்கு அடுத்ததாக பரம்பரை வைரிகள் என்று கருதப்படும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு மண்ணில் 2-0 என்று வீழ்த்தியது இந்தியா. சேவாக் தன் முதல் முச்சதத்தை முல்டானில் அடித்து எதிரணியினரின் பெரிய அச்சுறுத்தலானார்.

அதன் பிறகு வந்த சாப்பல் பயிற்சிக்காலம் மறக்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், இந்திய அணி தோனி என்பவரைக் கண்டு பிடித்தது. தொடர்ச்சியாக திராவிடின் தலைமையில் 17 ஒரு நாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தி வெற்றி கண்டது. இதே காலக் கட்டத்தில்தான் ஸ்ரீசாந்த் தென் ஆப்பிரிக்காவை தன்ஸ்விங் பந்து வீச்சால் மடியச் செய்தார். இந்தியா முதன் முதலாக டெஸ்ட் போட்டி ஒன்றை தென் ஆப்பிரிக்காவில் வெல்கிறது.

அதன் பிறகு கும்ளேயிடம் டெஸ்ட் தலைமை அளிக்கப்படுகிறது. அவரது தலைமையில் இந்திய அணி மேலும் சிறப்பாக உருவெடுத்தது. சேவாக் இல்லாத இந்திய டெஸ்ட் அணியை ஆஸ்ட்ரேலியாவிற்கு அழைத்துச் சென்று மெல்போர்னில் தோற்று, மறக்கப்பட வேண்டிய, சர்ச்சைக்குரிய சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் ஊழல்களால் இந்தியா தோல்வி தழுவுகிறது. அதற்கு பிறகு பெர்த் டெஸ்டில் மீண்டும் சேவாக் அழைக்கப்படுகிறார்.

அந்த பெர்த் டெஸ்டில் இந்தியா பழிவாங்கும் விதமாக ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெற்றது. இஷாந்த் ஷர்மா கண்டுபிடிக்கப்பட்டார். அடிலெய்டில் பலமான ஆஸ்ட்ரேலிய பேட்டிங் லைன்அப் மிகவும் அறுவையான ஒரு கிரிக்கெட்டை விளையாடியது, இறுதியில் சேவாக் அபாரமான 151 நாட் அவுட்டால் இந்தியா டிரா செய்தது. தொடரை இழந்தாலும், இந்தியா 2-1 என்று வெற்றிபெற்றிருக்க வேண்டிய தொடர் அது என்பதில் மாற்று கருத்துகளுக்கு இடமில்லை.

அதே தொடரின் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு தோனி தலைமைப் பொறுப்பு ஏற்கிறார். அவர் ஆஸ்ட்ரேலியாவின் கடைசி முத்தரப்பு ஒரு நாள் தொடரான அதில் முதல் இரண்டு இறுதியில் அவர்களை மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றார். அதன் பிறகு 20-20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது நாம் அறிந்ததே.

அதற்கு பிறகு ஆஸ்ட்ரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கும்ளே ஓய்வு பெற்ற தொடர் அது. இந்த தொடரில் கௌதம் கம்பீர் என்ற அருமையான துவக்க வீரரை இந்தியா பெற்றது. தோனி என்ற சிறந்த டெஸ்ட் கேப்டனும் இந்திய அணிக்கு கிடைத்தது.

அதன் பிறகு இந்தியா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக நியூஸீலாந்தில் தொடர் வெற்றி, இலங்கையில் 2 ஒரு நாள் தொடர்களை வெற்றி பெற்றது. இங்கிலாந்தை சென்னையில் அபாரமாக வெற்றி பெற்றது. முன்னால் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 4-0 என்று இந்தியா வெற்றி பெற்றது.

கடைசியாக இலங்கையை தற்போது 2-0 என்று வெற்றி பெற்று முதலிடத்திற்கு சென்றது. இடையிடையே தோற்க வேண்டிய சில போட்டிகளையும் இந்தியா அபாரமாக டிரா செய்தது. தோனியின் தலைமையின் கீழ் இந்தியா 10 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளை வென்றுள்ளது.

சில சுவையான புள்ளி விவரங்கள்:

உலகின் நம்பர் 1 அணியாக இந்தியா முன்னேறக் காரணம் அயல்நாடுகளில் தொடர்ந்து சீராக வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதுதான். 1990ஆம் ஆண்டுகளில் கூட இந்தியா 39 டெஸ்ட் போட்டிகளை அயல் நாட்டில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வென்று 15 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது.

1960ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை இந்தியா அயல் நாடுகளில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 124, இதில் வெற்றி பெற்றதோ 13 போட்டிகளில். தோல்வி தழுவியது 52 டெஸ்ட் போட்டிகளில்!

2000ஆம் ஆண்டு முதல் இந்தியா அயல் நாட்டு மைதானங்களில் விளையாடியது 56 டெஸ்ட் போட்டிகளில் இதில் வெற்றி 19, தோல்வியும் 19.

இதே காலக்கட்டத்தில் உள்நாட்டிலும் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளை பெற்று 8-இல் மட்டுமே தோல்வி கண்டது.

அயல் நாடுகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதான காரணமாக விளங்கியவர்கள் சேவாக், சச்சின், திராவிட், லக்ஷ்மண். 56 டெஸ்ட் போட்டிகளில் திராவிடின் சராசரி 57.08. சச்சின் இதற்கு அடுத்த நிலையில் உள்ளார். சேவாகும் லஷ்மணும் 45 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்தனர்.

இதற்கு காரணமான முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், இர்ஃபான் பத்தான், ஸ்ரீநாத், நெஹ்ரா, ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், அகார்கர், இஷாந்த் ஷர்மா, முனாஃப் படேல் ஆகியோர்.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு அயல் நாடுகளில் இந்தியாவின் வெற்றி தோல்வி விகிதம், ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளின் அயல் நாட்டு வெற்றி விகிதங்களை இந்தியா இந்தக் காலக்கட்டத்தில் பின்னுக்குத் தள்ளியது.

நம்பர் 1 நிலையை பெறுவது கடினமான காரியமென்றால், அதனைத் தக்கவைப்பது அதை விடப் பெரிய காரியம். ஆனால் இந்த நிலையை எட்டிய பிறகு இதுவே ஒரு புதிய உத்வேகத்தை இந்திய வீரர்களுக்கு அளிக்கும். எனவே பெரிய அளவுக்கு சரிவு ஏற்படாவிட்டாலும், 1,2 அல்லது 3 நிலைகளுக்குள் இந்திய அணி நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதே பெரிய சாதனைதான்.

No comments:

Post a Comment